

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே பள்ளி மாணவர் தற்கொலை சம்பவத்தில் போராட்டத்தில் பங்கேற்க வந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சீனு (12). இவர், அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய சீனு, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீஸார், மாணவர் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் சாதி பெயரைச் சொல்லி திட்டியதால் சீனு தற்கொலை செய்துகொண்டதாக கூறியும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும், அந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டும், மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் பங்கேற்க தமிழ் புலிகள் கட்சி தென்காசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர்(36) உள்ளிட்டோர் காரில் அரியநாயகிபுரம் சென்றனர். அவர்களது வாகனத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா மறித்து, வெளியூர்காரர்கள் அரியநாயகிபுரம் செல்ல அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.
அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் மதனகலா மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதில் தடுமாறி விழுந்த மதனகலாவுக்கு காயம் ஏற்பட்டது. கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சந்திரசேகரை போலீஸார் கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் விடுத்துள்ள அறிக்கையில், ‘அரியநாயகிபுரம் கிராம மக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபட தூண்டும் விதமாக செயல்பட்ட தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.