

சென்னை: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ். இவர் பள்ளியில் பயின்ற 8 வயது சிறுமிக்கு கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி யோகா பயிற்சி கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.