

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் நாய் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்திய குழு தங்களது அறிக்கையை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் சமர்ப்பித்தது.
காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் நாய் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விலங்கு நல ஆர்வலருமான ஸ்வப்னா சுந்தர், புதுடெல்லியில் உள்ள தேசிய விலங்கு நலவாரியத்துக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பினார்.
இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், அது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்பவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டிக்கு தேசிய விலங்கு நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர், தேவகோட்டை கோட்டாட்சியர், காரைக்குடி டிஎஸ்பி ஆகிய மூவரை கொண்ட குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில் அக்குழு மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.