

கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் கா.மாரியப்பன் (40). இவர் நேற்றுதனது மனைவி பத்தினி, மகன் சந்துரு, மகள் அம்சவேணி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் அலுவலக வாசல் அருகே வந்த 4 பேரும் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் பார்த்து, ஓடி வந்து தடுத்து 4 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து ஆட்சியரிடம் மாரியப்பன் அளித்த மனு விவரம்: நான் ஜோதிடம் தொழில் செய்து வருகிறேன். எனது உறவினர் ஒருவருக்காக திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் எனது பெயரில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். இதில்ரூ.10 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மேலும், எனது வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இருப்பினும் இன்னும் ரூ.10 லட்சம் தரவேண்டும் எனதொடர்ந்து என்னையும், எனதுகுடும்பத்தையும் மிரட்டி வருகின்றனர். தொடர்ந்து மிரட்டி வருவதால்என்னால் வாழ முடியவில்லை. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆட்சியர் தலையிட்டு என்னையும், எனதுகுடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 4 பேரையும் போலீஸார் வேனில் சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். கந்து வட்டி கொடுமையால் ஜோதிடர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.