

திருப்பூர் பத்மாவதிபுரத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ்குமார், சந்தியாதேவி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகள் காயத்ரி (14). அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் சிறுமியை பெற்றோர் சேர்த்தனர். மேலும் ராயபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதியில் சிறுமி சேர்க்கப்பட்டார்.
கடந்த 12-ம் தேதி மாலை மகளை பார்ப்பதற்காக ரமேஷ்குமார் பள்ளிக்கு சென்றார். ஆனால் காயத்ரி பள்ளியில் இல்லை. விசாரித்தபோது அவர் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ரமேஷ்குமார், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கடந்த 12-ம் தேதி காயத்ரியுடன் 2 சிறுவர்களும், ஒரு சிறுமியும் அம்மாபாளையத்தில் கைவிடப்பட்ட கல்குவாரி பாறைக்குழிக்கு வந்ததும், காயத்ரி தண்ணீரில் குதித்ததும், பயத்தில் மற்ற 3 பேரும் அங்கிருந்து ஓடிவந்ததும் தெரியவந்தது. அவிநாசி தீயணைப்பு வீரர்கள் சென்றும் நேற்று பாறைக்குழியில் சிறுமியின் சடலத்தை தேடினர்.
பலமணி நேர தேடுதலுக்குப் பிறகு சிறுமியின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.