

பண்ருட்டி வட்டத்துக்குட்பட்ட ஓறையூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் வெங்கடாசலம். இவரிடம் பெண் ஒருவர், அவரது கணவரின் இறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை இருந்ததால், அதை திருத்தம் செய்வது தொடர்பாக அணுகி உள்ளார்.
அவரை தனது இருப்பிடத்துக்கு வருமாறு விஏஓ கட்டாயப்படுத்தியுள்ளார். அவரது பேச்சை செல்போனில் பதிவு செய்த, அப்பெண், வெங்கடாசலம் குறித்து புதுப்பேட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் விஏஓவிடம் விசாரித்தனர். மது போதையில் இருந்தபோது, அவ்வாறு பேசிவிட்டதாகவும், இனி அதுபோல் பேச மாட்டேன் என விஏஓ கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் அப்பெண்ணையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பணி நேரத்தில் மதுபோதையிலும், பொதுமக்களிடம் அநாகரீகமாக பேசிய விஏஓ மீது புதுப்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பண்ருட்டி வட்டாட்சியர் கார்த்திக்கேயனிடம் கேட்டபோது, நிர்வாக ரீதியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய கடலூர் கோடாட்சியருக்கு பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்தார்.