

திருச்சி: துபாய், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 48.32 லட்சம் மதிப்பிலான 949 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாய் விமானநிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, ஆண் பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து ரூ.32.13 லட்சம் மதிப்பிலான 631 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, பெண் பயணி ஒருவர் உடைக்குள் மறைத்து ரூ.16.19 லட்சம் மதிப்பிலான 318 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரிடமிருந்து ரூ.48.32 லட்சம் மதிப்பிலான 949 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இரு பயணிகளிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.