

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக அவ்வபோது மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார்கள் சென்றன. இது குறித்து கடந்த மாதம் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.
அதில், தீட்சிதர் ஒருவர் குழந்தை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மற்றொரு குழந்தை திருமணம் புகார் வந்தது. அதில் 3 பேர் கைதாகினர்.
இதற்கிடையே, நேற்று மாலை இதே போன்ற மேலும் ஒரு குழந்தை திருமணப் புகாரில் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், வினோபால தீட்சிதர், வினோபால தீட்சதரின் மகன் ஆகியோரையும் கடலூர் டெல்டா படை போலீஸார் கைது செய்து எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையறிந்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அனைவரும் நேற்றிரவு கோயிலின் கீழ சந்நிதி அருகே கீழ வீதியில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் முன் நின்ற 7 தீட்சிதர்களை போலீஸார் தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, தீட்சிதர்களிடம் நேற்றிரவு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.