பரிசுப் பொருள் அனுப்புவதாகக் கூறி தொழிலாளியிடம் ரூ.15 லட்சம் மோசடி: கோவையை சேர்ந்த மூதாட்டி கைது
திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்த தம்பதி முகுந்தன், அழகுஜோதி (39). திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக அழகுஜோதி பணிபுரிந்து வருகிறார். பரிசுப் பொருள் விழுந்துள்ளதாக, இவருடைய அலைபேசிக்கு கடந்த ஜூலை 9-ம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு அலைபேசி எண்களில் இருந்து பெண் மற்றும் ஆண்கள் சிலர் அழகுஜோதியை தொடர்புகொண்டு, பலலட்சம் மதிப்பிலான பரிசுப்பொருளை கூரியர்மூலமாக அனுப்பிவைப்பதாகவும், இதற்காகமுன்பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதை நம்பி, ரூ.35,000 மற்றும் ரூ.1,15,000என பல்வேறு தவணைகளாக, அவர்கள் கொடுத்தவங்கிக்கணக்கில் ரூ.15 லட்சத்தை அழகுஜோதி செலுத்தியுள்ளார். ஆனால், பரிசுப்பொருள் வந்து சேராததால், சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அழகுஜோதி, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த ஜூலை 27-ம் தேதி புகார் அளித்தார். சைபர் கிரைம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தலின்பேரில், ஆய்வாளர்சித்ராதேவி தலைமையில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
வழக்கில் தொடர்புடைய வங்கிக் கணக்கு எண்ணின் முகவரி, கோவை வரதராஜபுரத்தை சேர்ந்த மேரி எலிசபெத் (65) என்பவருடையது என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் மேரி எலிசபெத்தை கைது செய்து, அவரிடமிருந்து 5 புதிய வங்கிக் கணக்குகள், 5 ஏ.டி.எம். கார்டுகள், 5 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த குற்ற சம்பவத்தில், வெளிநாட்டில் இருந்து மேரி எலிசபெத்தின்நண்பரும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மேரி எலிசபெத் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, மேரி எலிசபெத் நேற்று கைதுசெய்யப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
