

சென்னையில் குட்கா, மாவா, போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவும், அதனை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யவும், ‘புகையிலை ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர இடங்களில் அக். 14-ம் தேதி ஒரு நாள் சிறப்பு சோதனையை போலீஸார் மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக, 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 4.5 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 459 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதர இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 49 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 150 சிகரெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.அந்தவகையில் மொத்தம் சென்னையில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 53.7 கிலோ குட்கா, 609 சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.