விசாரணைக்கு வருவோரை தாக்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்: சாத்தான்குளம் போலீஸார் மீது தலைமை காவலர் குற்றச்சாட்டு
விசாரணைக்கு வருவோரை தாக்குவதை சாத்தான்குளம் போலீஸார் வழக்கமாக வைத்திருந்தனர் என மதுரை நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் தெரிவித்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் 2020 ஜூன் மாதம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காவலர்கள் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி நாகலெட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தலைமைக் காவலர் பியூலா செல்வகுமாரி ஆஜராகி சாட்சியமளித்தார்.
அவர் கூறுகையில், "ஜெயராஜ், பென்னிக்ஸைப்போல் விசாரணைக்காக அழைத்து வரும் அனைவரையும் கடுமையாக தாக்கி அனுப்புவதை சாத்தான்குளம் போலீஸார் வழக்கமாக வைத்திருந்தனர்" என்று கூறினார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பியூலாவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் விசாரணையை அக். 18-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
