Published : 15 Oct 2022 04:28 AM
Last Updated : 15 Oct 2022 04:28 AM

ரயில் நிலையத்தில் தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை - மகளை இழந்த துக்கத்தில் உயிர்துறந்தார் தந்தை

சென்னை: சென்னையில் மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு, கல்லூரி மாணவியைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், மகளை இழந்த துக்கத்தில், மாணவியின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து, தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை ஆலந்தூர் ராஜா தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராமலட்சுமி(43). ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மாணிக்கம்(47). கால்டாக்சி ஓட்டுநர். இவர்களது மகள் சத்யா (20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

அதே பகுதியில், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்(23). டிப்ளமோ படித்துள்ள இவர், சென்னை விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் பணியாற்றினார்.

சத்யா, சதீஷ் ஆகியோரது வீடுகள் எதிரெதிரே இருப்பதாலும், காவலர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இருவருக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்துள்ளது. இதனால் சத்யாவைப் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையில், மதுப்பழக்கம் கொண்ட சதீஷின் நடவடிக்கைகளில் சத்யாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சதீஷை அவர் புறக்கணித்துள்ளார். எனினும், இதைப் பொருட்படுத்தாமல், சத்யாவைப் பின் தொடர்ந்துள்ளார் சதீஷ்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சத்யா வழக்கம்போல கல்லூரிக்குப் புறப்பட்டுள்ளார். பரங்கிமலை ரயில் நிலையம் சென்ற சத்யா, நடைமேடையில் கல்லூரித் தோழி தாரணியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ், "ஏன் என்னை நிராகரிக்கிறாய்?" என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ், திடீரென சத்யாவைப் பிடித்து தண்டவாளத்தில் தள்ளினார். அப்போது, அந்த வழியாக வந்த மின்சார ரயிலின் சக்கரத்தில் சிக்கி, உடல் துண்டாகி சத்யா உயிரிழந்தார். உடனே, சதீஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார், சத்யாவின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

15 நாள் காவல்

தப்பியோடிய சதீஷைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, துரைப்பாக்கத்தில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சதீஷை நேற்று காலை கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், பின்னர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுவில் விஷமருந்தி தற்கொலை

மகளை இழந்த சத்யாவின் தந்தை மாணிக்கம், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். மகளின் எதிர்காலம் குறித்தும், சந்தோஷமாக வாழ வேண்டிய மகள் தலை துண்டாகி கொடூரமாக உயிரிழந்தது குறித்தும் உறவினர்களிடம் மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார். நேற்று அதிகாலை மயங்கிய நிலையில் இருந்த மாணிக்கத்தை, அவரது குடும்பத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துமவனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணிக்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மகள் இறந்த வேதனையில், அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னரே, அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து, தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தந்தை, மகள் இருவரது உடல்களும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர், அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

காவலர் குடியிருப்பில் அஞ்சலி

இந்நிலையில், சத்யா, மாணிக்கம் ஆகியோரது உடல்கள் இறுதி அஞ்சலிக்காக ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் நேற்று வைக்கப்பட்டன. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் போலீஸார், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தலைமைக் காவலர் ராமலட்சுமிக்கு ஆணையர் ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்த சத்யாவுக்கு இரு சகோதரிகள் உள்ளனர். ஒரே சமயத்தில் கணவரையும், மகளையும் பறிகொடுத்த பெண் தலைமைக் காவலரும், அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமி, புற்றுநோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சத்யாவுடன் சேர்த்து 3 பெண் குழந்தைகள். இந்நிலையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ராமலட்சுமிக்கு தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்க ‘காவல் கரங்கள்’ அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றிரவு உத்தரவிட்டார். மாணவியைக் கொன்ற சதீஷின் 2 சகோதரிகளுக்குத் திருமணமாகி, அதே பகுதியில் வசிக்கின்றனர். சதீஷ் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை மாம்பலம் ரயில்வே போலீஸாரிடம் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x