

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு தட்சிணா மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வெரோன் (44). பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறை சென்று வரும் இவரால் குடும்பத்தினருக்கு அவப்பெயர் உண்டானது. இந்நிலையில் கடந்த 2016 டிசம்பர் 30-ம் தேதி குடிபோதையில் வந்த வெரோன், தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவர், 'வேலைக்கு செல்லாமல் ரவுடியிசம் பார்க்கும் உனக்கு நான் சாப்பாடு போட மாட்டேன்' என கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த வெரோன், தனது தாயை கத்தி யால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து டி.நகர் போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் 2021-ல்வெரோனை கைது செய்தனர். கொலை நடந்தவுடன் தப்பி ஓடிய வெரோன், சிதம்பரம், சீர்காழி, வடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் பிச்சைக்காரன் வேடமிட்டு அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி செல்வநாதன், தாயை கொன்ற வெரோனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.