திருப்பூர் | உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 5 பேரை திருப்பூர் மாநகர போலீஸார் இன்று (அக்.14) கைது செய்தனர்.

திருப்பூர் மாநகர் மங்கலம் சாலையில் நேற்று இரவு சோதனைச் சாவடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வடமாநில இளைஞர்களை போன்று சுற்றித்திரிந்த 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்களுக்கு முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சோதனை செய்தனர். இதையடுத்து அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முறைகேடாக திருப்பூர் பெரியாண்டிபாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

அதேபகுதியில் உள்ள சாய ஆலை நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிக்குச் சேர்ந்து வேலையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக பெற்றதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சாய ஆலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ், ரஷீத்சேக் (34), முகமத் சோஹித் (26), ரஷிதுல் (28), மிஷன்கான் (28) மற்றும் சுமன் மசூந்தர் (26) ஆகிய 5 பேர் திருப்பூர் மத்திய போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த சுகரா, குல்னா மற்றும் ஜட்ரா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in