

மும்பை: மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 15 கிலோ தங்கம், ரூ.22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை சத்திரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், உளவுத் தகவல் அடிப்படையில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து வந்த இந்தியர் ஒருவர், பெல்ட்டில் மறைத்து கடத்தி வந்த 9.895 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஷார்ஜாவில் இருந்து சென்னை வழியாக மும்பை வந்த ஒரு பயணி 1.875 கிலோ எடையுள்ள தங்க பவுடரை உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தார்.
ஜெட்டாவில் இருந்து வந்த இரு பயணிகள் 1068 கிராம் மற்றும் 1185 கிராம் தங்கத்தூள் பாக்கெட்களை உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தனர். துபாயில் இருந்து வந்த சூடான் பயணி ஒருவர் 973 கிராம் தங்கத்தூள் அடங்கிய மெழுகை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்தார். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.7.87 கோடி. இந்த கடத்தல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் இருவரிடம் சோதனை செய்தபோது,ஒருவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பணம் 50,000 திர்ஹாம், மற்றொருவரிடம் 45,000 திர்ஹாம் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.22 லட்சம்.