

திருவள்ளூர்: திருவள்ளூர் - தாவுத்துக்கான்பேட்டை பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுசிலா (65). இவர், தன் தாய் கன்னியம்மாள், மகன்கள் சீனிவாசன், பார்த்திபன், மருமகள்கள் மாலதி, ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9-ம் தேதி ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேசன், லட்சுமி தம்பதி, தாங்கள் திருவள்ளூர் பகுதியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று சுசிலாவிடம் கேட்டுள்ளனர்.
ஆகவே, சுசிலா, தான் வசிக்கும் வீட்டையொட்டியுள்ள, தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டை ஆந்திர தம்பதிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்காக, சுசிலாவின் மருமகள் ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் சென்றுள்ளனர். இச்சூழலில், பணிமுடிந்து ஹேமாவதி நேற்று காலை வீட்டுக்கு வந்தார்.
அப்போது, வாடகைக்கு குடியிருந்த தம்பதி, சுசிலாவுக்கு பாலிலும், காளியம்மாளுக்கு பிரியாணியிலும், பார்த்திபனுக்கு மதுவிலும் மயக்க மருந்து கொடுத்து மயக்கம் அடைய செய்து, சுசிலா அணிந்திருந்த 11 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, சுசிலா திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாடகைக்கு குடியிருந்த ஆந்திர தம்பதியை தேடி வருகின்றனர்.