

திருவண்ணாமலை: தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூருக்கு அழைத்து செல்லும் வழியில் திருவண்ணாமலை அருகே தப்பித்து ஓடிய 17 வயது சிறுவனை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் பிடித்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், தூத்துக்குடி அண்ணா நகரில் வசிக்கும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, வேலூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்க தூத்துக்குடி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2 காவலர்கள் பாதுகாப்புடன் அரசுப் பேருந்தில் சிறுவன் அழைத்து வரப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் தீபம் நகர் அருகே நேற்று முன் தினம் நள்ளிரவு வந்தபோது, அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 2 காவலர்களின் பிடியில் இருந்து சிறுவன் தப்பியோடி, கரும்பு தோட்டத்தில் தஞ்சமடைந்தார். இதையறிந்து, சம்பவ இடத்துக்கு சென்று திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் கிராமிய காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் போராடியும், சிறுவன் கிடைக்கவில்லை. கரும்பு தோட்டத்தில் இருள் சூழ்ந்திருந் ததால் சிறுவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சிறுவன் வெளியேறாமல் இருக்க, கரும்பு தோட்டத்தை சுற்றி கண்காணிப்பு பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
பின்னர், பொழுது விடிந்ததும் தேடுதல் வேட்டை மீண்டும் தொடர்ந்தது. கரும்பு தோட்டத்தில் சிறுவன் சென்றுள்ள தடயங்கள் தெரியவந்தன. அப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது இருந்து, சிறுவனின் நடமாட்டத்தை கண்காணித்தனர். நீண்ட போராட்ட த்துக்கு பிறகு காவல்துறை யிடம் 17 வயது சிறுவன் சிக்கினார். இதையடுத்து, சிறுவனை தூத்துக்குடி காவலர் களிடம் ஒப்படைத்ததும், வேலூர் கூர்நோக்கு இல்லத்து க்கு அழைத்து சென்று ஒப்படைக்கப் பட்டார். இது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு காவல்துறை மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.