

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் சிவக்குமார்(46), வெங்கடேஷ்பாபு (45) ஆகியோர், 2021 டிசம்பர் 23-ம் தேதி மது அருந்தியுள்ளனர். பின்னர், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை இருவரும் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த சிறுமி, வீட்டில் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. சிறுமி உடல்நலமின்றி இருப்பதைப் பார்த்த அவரது தாயார், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார், சிவக்குமார், வெங்கடேஷ்பாபு ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சிவக்குமார் வெங்கடேஷ்பாபு ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூரண ஜெயஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.