

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (எ) பாலா (49). இவர் உள்ளிட்ட 13 பேர் சமூக வலைதளங்களில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற பெண் நீதிபதி அல்லி மற்றும் தாராபுரம் நீதித்துறை நடுவர் சசிக்குமார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தவறாக பேசி, யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திருப்பூர் மாநகர் குற்றப்பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் தனித்தனியாக கடந்த 2019-ம் ஆண்டு நீதிபதிகள் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த பாலாவை தேடும் பணி நடந்தது. ஆனால் பாலா தொடர்பான தகவல்கள் இல்லாததால் போலீஸாருக்கு அவரை பிடிப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர் திண்டுக்கல்லில் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவரை அங்கு வைத்து திருப்பூர் சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் ராதா ஆகியோர் கொண்ட போலீஸார் இன்று கைது செய்தனர். வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்ட வந்த நபரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.