Published : 12 Oct 2022 10:20 AM
Last Updated : 12 Oct 2022 10:20 AM

சைபர் குற்றங்களிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க அக்கா திட்டம்: கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவையில் நடைபெற்ற ‘சைபர் கிரைம்’ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

இணையதள (சைபர் கிரைம்) குற்றங்களில் இருந்து இளைஞர் மற்றும் இளம்பெண்களை பாதுகாக்கும் நோக்கில் ‘அக்கா’ என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா மற்றும் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பு சார்பில் ‘சைபர்’ குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அவற்றை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். ‘சைபர்’ குற்றங்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை பாதுகாக்கும் நோக்கில் மாநகர காவல்துறை சார்பில் ‘அக்கா’ என்ற பெயரில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கல்லூரிகளுக்கு, குறிப்பாக பெண்கள் கல்லூரிகளுக்கு பெண் காவல் அதிகாரி நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் பேசினார். சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை தலைவர் ஜெயராமன் பேசும்போது, “சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் தங்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் தெரிவிக்க பயந்து ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றனர்.

சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எங்கள் அமைப்பு சார்பில் 15 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்படுவோர் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

ஸ்டேட் வங்கியின் துணைப்பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஜெமின்யா வின்ஸ்டன், சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை செயலாளர் சண்முகம், ஆலோசகர் குமார், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அக்கா திட்டம் குறித்து போலீஸார் கூறும்போது, “இத்திட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் பெண் காவல் ஆய்வாளர் சைபர் குற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார். பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி அவரிடம் முறையிடலாம். அவர் பரிவுடன் விவரங்களை கேட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்” என்றார். பாதிக்கப்படுவோர் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x