

திருப்பூர்: இளைஞர் கொலை வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன் (22). கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்7-ம் தேதி திருப்பூர் சிவசக்தி நகர் வேப்பங்காடு தோட்டம் அருகே முள்ளுக்காட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக லோகநாதனின் அண்ணன் நாகராஜன் அளித்த புகாரின்பேரில், திருப்பூர் மத்திய போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் திருச்சியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் முருகன், பெருமாள் ஆகிய 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில், இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்தது தெரியவந்தது.
கொலையான லோகநாதன் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். முருகனின் மனைவியுடன், லோகநாதனுக்கு கூடா நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த முருகன் லோகநாதனை எச்சரித்தும்அவர் நட்பை கைவிடவில்லை. இதன்தொடர்ச்சியாக முருகனின் மனைவியும் லோகநாதனும் கிருஷ்ணகிரிக்குச் சென்று தலைமறைவாகினர். இதையடுத்து 2 பேருக்கும் திருமணம் செய்து வைப்பதாக நம்ப வைத்து இருவரையும் திருப்பூருக்கு முருகன்வரவழைத்தார். இதை நம்பி 2 பேரும் திருப்பூர் வந்தனர். இந்நிலையில் முருகனும் அவரது உறவினர் பெருமாள் என்பவரும் சேர்ந்து லோகநாதனை, திருப்பூர் கேவிஆர் நகரில் காரில்வைத்து அடித்துக் கொன்றனர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருவருக்கும், இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர்கள் தங்கவேல், கார்த்திகேயன், ஆய்வாளர் பத்ரா மற்றும் போலீஸாரை மாநகரக் காவல் ஆணையர் பிரபாகரன் பாராட்டினார்.