

முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக்கூறி மோசடி செய்தவருக்கு ரூ.12.60 லட்சம் அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்துள்ளது.
கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் ஸ்ரீரடி வெல்த் கிளப் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இதனை, அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (46), அவரது சகோதரி நந்தினி (39), மனைவி லட்சுமி (40), மேலாளர் தர்மேந்திரா (32) ஆகியோர் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதந்தோறும் அதிக வட்டி அளிப்பதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை அளிக்கவில்லை. இதையடுத்து, பீளமேட்டைச் சேர்ந்த சரோஜினி என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2010-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், "தனசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மொத்த அபராத தொகையான ரூ.12.60 லட்சத்தில் ரூ.5 லட்சத்தை கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தனசேகர் செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். இல்லையெனில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
மொத்த அபராத தொகையில் ரூ.11 லட்சத்தை பாதிக்கப்பட்ட 12 பேருக்கு பிரித்து வழங்க வேண்டும். இந்த வழக்கிலிருந்து நந்தினி, லட்சுமி, தர்மேந்திரா ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்" என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனசேகர் எஞ்சியுள்ள ரூ.7.60 லட்சத்தை நேற்று செலுத்தியதையடுத்து, நீதிமன்றம் கலையும் வரையிலான சிறை தண்டனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.கண்ணன் ஆஜரானார்.