

கோவையில் வீடு கட்டி விற்கலாம் எனக்கூறி தொழிலதிபரிடம் ரூ.61 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கே.கே.புதூர் மணியம் காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(55). காளபட்டி பிரதான சாலையில் வீடு கட்டி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விளாங்குறிச்சி பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்த குணசேகரன்(59), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
குணசேகரனும், பீளமேட்டைச் சேர்ந்த வேலுமணி(56) என்பவரும் சேர்ந்து இருகூர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த சுரேஷ்(47) என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர். சுரேஷ் பாப்பம்பட்டியில் தனக்கு சொந்தமானது என 35 ஏக்கர் இடத்தை என்னிடம் காட்டினார். இந்த இடத்தில் மேலும் மூவருக்கு பங்கு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கூட்டு ஒப்பந்தம் போட்டு, மேற்கண்ட இடத்தில் வீடு கட்டி விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என சுரேஷ் கூறினார். அதை நம்பிய நான், அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.64 லட்சம் தொகையை பல்வேறு தவணைகளில் செலுத்தினேன்.
அதன் பின்னரே, அந்த இடம் வேறொருவருடையது எனவும், சுரேஷ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து என்னை நம்ப வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நான் கேட்டதற்கு ரூ.3 லட்சம் தொகையை மட்டுமே அவர் திருப்பி தந்துள்ளார். மீதமுள்ள ரூ.64 லட்சம் தொகையை தரவில்லை. அதைக் கேட்ட போது சுரேஷ், வேலுமணி, குணசேகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்த மாநகர குற்றப்பிரிவு போலீஸார் சுரேஷ், வேலுமணி, குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.