Published : 10 Oct 2022 07:00 AM
Last Updated : 10 Oct 2022 07:00 AM
சென்னை: சென்னை அமைந்தகரை என்எஸ்கே நகரை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி (32). இவர் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்துகிறார். இவரது மனைவி பூங்குழலி (28). இவர்களது குழந்தை குயிலிஸ்ரீ (6 மாதம்). இந்நிலையில், தங்கள் கடையில் நடைபெறும் கணபதி ஹோமம் பூஜையில் கலந்துகொள்வதற்காக பூங்குழலி தனது குழந்தையையும் தூக்கிக்கொண்டு நேற்று அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அண்ணா பவளவிழா நினைவு வளைவு அருகே, குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதில், பூங்குழலியும், அவரது 6 மாத பெண் குழந்தையும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். தகவல் கிடைத்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர்.பூங்குழலி மற்றும் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நிகில் (24) மற்றும் அவருடன் இருசக் கர வாகனத்தில் வந்த ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த இளைஞர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனம் மோதி தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT