

நொய்டா: நொய்டாவில் உள்ள செக்டார் 46-இல் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ஒன்றின் காவலாளியும், தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி பிரதிநிதி ஒருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது. ஞாயிறு (அக்.9) அன்று பகல் 12 மணியளவில் இந்த கைகலப்பு நடந்துள்ளது. டெலிவரி பிரதிநிதியை குடியிருப்பு பகுதிக்குள் செல்ல காவலாளி மறுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் கையில் தடியை கொண்டு தாக்கிக் கொண்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் அதனை தடுக்க முயன்றுள்ளனர். இருந்தும் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. இறுதியில் உணவு டெலிவரி பிரதிநிதி தாக்குதலை தாங்க முடியாமல் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் நொய்டாவின் சாதர்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த உணவு டெலிவரி பிரதிநிதியின் பெயர் சாபி சிங் மற்றும் காவலாளியின் பெயர் ராம் வினய் சர்மா எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். முன்னதாக, நொய்டாவில் காவலாளி ஒருவரை பெண்கள் தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.