Published : 09 Oct 2022 04:35 AM
Last Updated : 09 Oct 2022 04:35 AM

ரூ.2 கோடி மோசடி மூவர் கைது: கோவை அருகே கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை அருகே ரூ.2 கோடி கடன் பெற்று திருப்பித்தராமல் மோசடி செய்தது தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட காளிமுத்து, மோகன்ராஜ், விஜயகுமார். (அடுத்த படம்) காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள்.

கோவை

கோவை அருகே ரூ.2 கோடி கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கோவை கவுண்டம்பாளையத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதிநிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.2 கோடி கடன் பெற்றார்.

பணத்தை திருப்பி வழங்காமல் தாமதப்படுத்தி வந்தார். அதுகுறித்து கேட்ட போது மோகன்ராஜ் கொலை மிரட்டல் விடுத்தார். ரவிச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் மோகன்ராஜிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ‘‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜூக்கு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சடகோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் பணம் கொடுத்தால் அதற்கு இரட்டிப்பாக பணம் வழங்குவதாக சடகோபால் கூறியுள்ளார்.

இதை நம்பிய மோகன்ராஜ் கடன் பெற்று ரூ.2 கோடியை சடகோபாலிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்ற பின் வாக்குறுதி அளித்ததுபோல் இரட்டிப்பு பணம் தராமல் சடகோபால் ஏமாற்றியுள்ளார்’’ என தெரியவந்தது.

இதையடுத்து, சடகோபாலை தேடி போலீஸார் பெரியநாயக்கன் பாளையத்துக்குச் சென்றனர். சடகோபால் தலைமறைவான நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த 2 நபர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

அந்த வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதை எடுத்துப் பார்த்தபோது கலர் ஜெராக்ஸ் கரன்சி நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

அவற்றில் ‘சில்ரன் பேங்க் ஆப் இந்தியா’ என அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்கிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, விளம்பர படம் எடுப்பதற்காக அந்த போலி ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சடகோபாலின் நண்பர்களான விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து(28) மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார்(35), மோகன்ராஜ்(38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து லேப்டாப், மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் இரிடியம் கலசம் வாங்க வந்த நபர்களை ஏமாற்றி பணத்தை அபகரித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x