‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ - 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கினர்

‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ - 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கினர்

Published on

`ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடவடிக்கையின்படி தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் வங்கிக்கணக்குகளில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

மேலும், 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக `ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில், ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர்.

கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை நிலுவையில் இருந்த 15 பேர், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள்

13 பேரும் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. பிடிபட்ட மற்ற 105 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. ‘ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in