

கரூர்: காவிரி ஆற்றில் மூழ்கிய இரு இளைஞர்கள் மூழ்கியதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரை கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் தேடி வருகின்றனர். லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் ராணி மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகன் புருஷோத்தமன் (18). பிளஸ் 2 முடித்துள்ளார். நாகராஜ் மகன் விஷ்வா (24). பி.இ. பட்டதாரி. புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி இவர்கள் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குலதெய்வ கோயிலான பெருமாள் கோயிலுக்கு செல்வதற்காக இன்று (அக். 8) வந்துள்ளனர்.
கோயிலுக்கு செல்வதற்காக லாலாபேட்டை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விஷ்வா, புருஷோத்தமன் இருவரும் நீரில் மூழ்கினர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களை தேடியதில் புருஷோத்தமன் சடலமாக மீட்கப்பட்டார். கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் விஷ்வாவை தொடர்ந்து தேடி வருகின்றனர். லாலாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.