Published : 08 Oct 2022 06:22 AM
Last Updated : 08 Oct 2022 06:22 AM

நள்ளிரவில் வீடு புகுந்து கடத்த முயற்சி: ஏர்வாடி அருகே 2 பெண்களுக்கு கத்திக் குத்து

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து இளம் பெண்ணை கடத்த முயன்றபோது, அப்பெண்ணையும், தாயாரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே சடைமுனியன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் கோகிலா(21), சேதுக்கரையைச் சேர்ந்த பழனி மகன் கார்த்திக்கை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கோகிலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கார்த்திக்கின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவருடன் பேசுவதை கோகிலா நிறுத்திவிட்டார்.

ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பர் சேதுக்கரையைச் சேர்ந்த நாகவேல் மகன் அஜித்துடன், சர்வேஸ்வரன்(25) என்பவரது ஆட்டோவில் சடைமுனியன் வலசையில் உள்ள கோகிலாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றார். ஆட்டோவை ஓட்டிவந்த சர்வேஸ்வரன் வீட்டின் வெளியே நின்று கொள்ள, மற்ற இருவரும் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த கோகிலாவை கடத்திச் செல்ல முயற்சித்தனர்.

கோகிலா கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவரது தாய் தெய்வராணி இருவரையும் தடுத்தார். அப்போது கார்த்திக், அஜித் ஆகியோர் கோகிலா, தெய்வ ராணியை கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். தாயும், மகளும் படுகாயமடைந்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ஆட்டோ ஓட்டுநர் சர்வேஸ்வரனை விரட்டிப்பிடித்து ஏர்வாடி போலீஸில் ஒப்படைத்தனர்.

கோகிலாவும், தெய்வராணியும் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சர்வேஸ்வரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கார்த்திக், அஜித்தை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x