

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள மலையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சந்தோஷ்(22). இவர், மணப்பாறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்த இவர், வீட்டில் இருக்கும் நகை, பணத்தை பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மோதிரத்தை எடுத்துச் சென்று விற்று ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதைத் ெதாடர்ந்து நேற்று காலை தனது செல்போனில் ‘என்னுடைய மரணத்துக்கு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ என ஸ்டேடஸ் வைத்துள்ளார். இந்நிலையில் மணப்பாறை கீரைத் தோட்டம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், திருச்சியில் இருந்து நெல்லை சென்ற ரயில் முன்பு பாய்ந்து சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.