

ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம், மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, நூதன முறையில், ரூ 2.46 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், தனது சகோதரர் மூலமாக, இணையம் மூலம் மின்கட்டணம் செலுத்தியுள்ளார்.
பின்னர் சில நாட்களுக்கு முன், ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில், ‘நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாததால், இன்று இரவு உங்கள் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, ‘மின் இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க, வாட்ஸ் அப்பில் அனுப்பும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ஆசிரியை, குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில், ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டதையடுத்து, இணையம் மூலம் அவர் செலுத்தியுள்ளார்.
அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை, வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். இதன்பின், சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.46 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
மோசடி மூலம் தனது பணம் அபகரிக்கப்பட்டதை உணர்ந்தார். அவர் அளித்த புகாரின்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
‘5ஜி’ சேவை பெயரில் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:
பொதுமக்கள் முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போன் அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சலை நம்பி ஏமாற வேண்டாம். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை நம்பியும் ஏமாற வேண்டாம்.
தற்போது, ‘5ஜி’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, உங்கள் செல்போன் எண்ணுக்கு ‘5ஜி’ சேவை வழங்குவதாகக் கூறி விவரங்களை சேகரிக்கும் நூதன மோசடி நடக்கிறது. பொதுமக்கள் ஏமாற வேண்டாம், என்றனர்.