கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் ரூ.50 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: 460 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் ரூ.50 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: 460 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை தமிழக காவல்துறை முடக்கியுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 460 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடந்து வருகிறது.

இதில், கடந்த ஒரு வாரத்தில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 332 கிலோ கஞ்சா, அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இதுவரை கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 460 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,006 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில், தமிழகத்தில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர், இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in