

13.52 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நகைக்கடையின் விற்பனைப்பிரிவு மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சாகன்லால் காத்ரி(60). இவர், பெங்களூரில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இங்கிருந்து கோவையில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் மூலம் சாகன்லால் காத்ரி விற்பனை செய்து வருகிறார்.
விற்பனைக்கு எடுத்துச் செல்லும் நகைகளில் விற்கப்பட்டது போக, மீதமுள்ளவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை சரிபார்ப்பார். இப்பணிகளை நகைக்கடையில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமன் திவேஷி(45) கவனித்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் கடந்த 12-ம் தேதி வரை கோவையில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக, 1 கிலோ 867 கிராம் தங்க நகைகளை மட்டுமே ஹனுமன் திவேஷி கடையில் ஒப்படைத்தார்.
13 கிலோ 520 கிராம் தங்க நகைகளை திரும்ப ஒப்படைக்காமல் தலைமறைவாகிவிட்டார். இவற்றின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.
இம்மோசடி தொடர்பாக சாகன்லால் காத்ரி கோவை வெரைட்டிஹால் சாலை போலீஸில் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து ஹனுமன் திவேஷியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தல்பத்சிங் என்பவரையும் தேடி வருகின்றனர்.