

திருப்பூரை சேர்ந்த பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டையும், கற்களையும் வீசி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் காங்கயம் சாலை ஜெய் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் பிரபு (36). ஆர்எஸ்எஸ் அமைப்பின் உடற்பயிற்சி பிரிவு மாநில செயலாளராக உள்ளார். கடந்த 23-ம் தேதி இவரது வீடு,கார் மீது கற்களை வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த கோவை மாநகர் கரும்புக்கடையை சேர்ந்த சம்சுதீன் (34), எஸ்டிபிஐயில் உள்ள கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த நிஜாமுதீன் (41) என்பது தெரியவந்தது.
2 பேரையும் நல்லூர் போலீஸார் கைது செய்தனர். இதேபோல பாஜகவில் கோவை பெருங்கோட்ட பொறுப்பாளராக இருப்பவர் பாலகுமார் (43). இவர், திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே ஏவிபி லே-அவுட் 3-வது வீதியில் வசித்து வந்தார்.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வேறுபகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டில், கடந்த 25-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் தனிப்படை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ வடக்கு தொகுதி செய்தி தொடர்பாளரான பாண்டியன் நகரைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (20), எஸ்டிபிஐயில் உள்ள அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த பெரோஸ்கான் (32) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்விரு வழக்குகளிலும், சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் பாராட்டினார்.