Published : 06 Oct 2022 04:25 AM
Last Updated : 06 Oct 2022 04:25 AM

பல்லடம் அருகே ரூ.2.15 கோடி மோசடி: கடத்தப்பட்டதாக வீடியோ வெளியிட்ட பெண், ஆண் நண்பர் கைது

திருப்பூர்

தொழிலில் நஷ்டமடைந்த நபர்களுக்கு கடன் உதவி செய்து தருவதாகக்கூறி, பல்லடம் அருகே ரூ.2 கோடியே 15 லட்சம் மோசடி செய்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.

பல்லடம் அருகே வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா (38). பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் நடத்தி வந்தார். பிரவீனாவின் தாயார் மீனா, தனது மகளை காணவில்லை என பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரவீனா வெளியிட்ட வீடியோவில், ‘எனது அழகு நிலையத்துக்கு பல்லடம் வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமாரின் மனைவி தமிழ்ச்செல்வி என்பவர் அடிக்கடி வருவார்.

சிவக்குமார் ஜவுளித்தொழில் செய்து வருவதாகவும், தொழிலில் பங்குதாரரானால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் தமிழ்ச்செல்வி கூறினார். அவரை நம்பி எனது வீட்டின் பத்திரத்தை கொடுத்தேன்.

அதனை தமிழ்ச்செல்வி வங்கியில் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்றார். என்னிடம் ரூ.10 லட்சம்தான் கடன் பெற்றதாக அவர் கூறினார். வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், எனது சொத்தை ஏலம் விடுவதாக, வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

தொழில் விஷயமாக திருச்சி செல்வதாகவும், அங்குசிலரிடம் பணம் வர வேண்டி உள்ளதாகவும் கூறிய சிவக்குமாரும், தமிழ்ச்செல்வியும் என்னையும் அவர்களுடன் அழைத்துச் சென்றனர். திருச்சியில் ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்துள்ளனர்’ என கண்ணீர்மல்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் இருந்த பிரவீனாவை பிடித்து பல்லடம் போலீஸார் விசாரித்ததில், வீடியோவில் வெளியிட்டிருந்த தகவல் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து பிரவீனாவையும், இவரது நண்பரான சிவக்குமாரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பிரவீனாவுக்கு, சிவக்குமார் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் பங்கு தாரராக சேர்ப்பதாகவும், வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகவும் கூறி இருவரும் கோவையை சேர்ந்த குமரேசன் என்பவரை சந்தித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பிரவீனா, சிவக்குமாருடன், தமிழரசன் (42) என்பவரும் சேர்ந்து குமரேசனிடம் சில சொத்து ஆவணங்களை பெற்று, ஈரோட்டில் உள்ள வங்கியில் ரூ.2 கோடியும், வட்டிக்கு பணம் தருபவரிடம் ரூ.15 லட்சமும் பெற்றுள்ளனர்.

இதை குமரேசனுக்கு தராமல் ஏமாற்றியுள்ளனர். மேலும், பணத்தை வாங்கி வருவதாகக்கூறி குமரேசனிடம் இருந்த 2 கார்களையும் பெற்றுக் கொண்டு 3 பேரும் தலைமறைவாகினர்.

2 ஆண்டுகளுக்குப்பின் தன்னை சிவக்குமார் கடத்தியதாக பிரவீனா வீடியோ வெளியிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தலைமறைவான தமிழரசனை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x