பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் இளைஞருக்கு ‘ஆயுள்’ உறுதி
சென்னை: பிளஸ் 2 மாணவியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரை சேர்ந்த ஜெயராமன் என்ற வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி மாணவியின் வீட்டுக்கு சென்ற ஜெயராமன், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். படிப்பு முடித்த பிறகு அதுபற்றி பேசிக் கொள்ளலாம் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், மாணவியை கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளி்த்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மாணவியின் உடலில் இருந்த 32 காயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஜெயராமனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
