

கோவை: கோவையில் சாலையின் நடுவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை வெரைட்டிஹால் சாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர், கடந்த 2-ம் தேதி இரவு வழக்கம் போல் தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியா வந்தது. அதில், நள்ளிரவு நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடு சாலையில் கேக் வைத்து, அதை பட்டா கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.
மாரியப்பன் விசாரித்த போது, அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம், வெரைட்டிஹால் சாலை காவல் எல்லைக்குட்பட்ட இடையர்வீதி எனத் தெரிந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வீடியோ கடந்த மாதம் 25-ம் தேதி எடுக்கப்பட்டது எனத் தெரிந்தது. மேலும், அதில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெலுங்குபாளையம் பிரிவைச் சேர்ந்த அசோக்குமார் (30), பி.என்.புதூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (23), தெலுங்குபாளையம் பிரிவைச் சேர்ந்த அரவிந்த்குமார் (27), காந்திபார்க் எம்.என்.ஜி வீதியைச் சேர்ந்த பார்த்திபன் (26) ஆகியோர் எனத் தெரிந்தது.
இதில் அசோக்குமார் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாகவும், தினேஷ்குமார் கூலித் தொழிலாளியாகவும், அரவிந்த்குமார் ஆட்டோ ஓட்டுநராகவும், பார்த்திபன் இறைச்சி வியாபாரி என்பது விசாரணையில் தெரியவந்தது.
அசோக்குமாரின் பிறந்தநாளையொட்டி, நடு சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட நால்வரையும் இன்று காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.