

புது டெல்லி: தலைநகர் டெல்லியில் 6 வயது சிறுவனை பலி கொடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லோதி காலனி பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கொலையாளிகள் இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த சிறுவனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்று இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அதுவும் அந்த கட்டிடம் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சொந்தமானது என தெரிகிறது.
கைது செய்யப்பட்ட கொலையாளிகளின் பெயர் ஜெய் குமார் மற்றும் அமர் குமார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்த தகவலை அந்த கட்டிடத்தின் காவலாளிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை மாலை கடவுளை வணங்கிய போது சிறுவனின் உயிர்பலி வேண்டும் என கடவுள் கேட்டதாகவும். அதன் பேரில் இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் வணங்கிய கடவுளின் பெயர் ‘போல் பாபா’ என தெரிவித்துள்ளனர்.
அந்த கட்டிடத்தில் தான் கொலையாளி வேலை செய்து வந்துள்ளார். அதே கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தையும், கொலையாளியும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த சிறுவனை வழிமறித்து இந்த கொலையை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும், கொலையாளிகளுக்கு எந்தவித முன் விரோதமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.