Published : 02 Oct 2022 05:07 AM
Last Updated : 02 Oct 2022 05:07 AM
வேலூர்: பள்ளிகொண்டாவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14.71 கோடி ஹவாலா பணம் கோவையில் உள்ள தங்க நகை வியாபாரிகளுக்காக கடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி கடந்த 29-ம் தேதி இரவு லாரியில் கடத்த முயன்ற ரூ.14.71 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிசார் அஹ்மது, வாசிம் அக்ரம், நாசர், சர்புதீன் உள்ளிட்ட 4 பேரை பள்ளிகொண்டா போலீஸார் கைது செய்தனர். ரூ.14.71 கோடி பணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிடிபட்ட நாசர் அஹ்மது சென்னையில் குர்தா விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர், கமிஷனுக்கு ஹவாலா பணத்தை எடுத்துச் செல்லும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகளுக்கு கோவையில் உள்ள வியாபாரிகள் மூலம் பல விதமான தங்க நகைகளை அனுப்பி வைக்கின்றனர். இதற்கான பணத்தை வியாபாரிகள் சிலர் வரி செலுத்தாமல் கருப்புப் பணமாக கைமாற்றி வருகின்றனர். இதுபோன்ற தொடர்புகள் சென்னை, கோவை, கேரளா வரை உள்ளது. இதில், நிசார் அஹ்மது ஒரு லட்சம் ரூபாய்க்கு 50 வீதம் கமிஷன் பெற்று பணத்தை கடத்தி வருகிறார். மாதத்துக்கு 2 அல்லது 3 முறை இப்படி பணப்பரிமாற்றம் நடந்து வருகிறது.
அதேபோல், கேரளாவில் இருந்து கோவைக்கு மரத்தூள் ஏற்றி வந்த சர்புதீன், நாசர் ஆகியோர் ஊர் திரும்பும் முன்பாக கோவைக்கு பணம் கடத்துவதற்காக வந்து போலீஸாரிடம் சிக்கிக்கொண்டு உள்ளனர். 4 பேரின் செல்போன் எண்களைக் கொண்டு, கடந்த ஓராண்டில் இவர்கள் எத்தனை முறை வேலூர் வழியாக வந்து சென்றுள்ளனர் என்று ஆய்வு செய்யப்படும். அவர்களது செல்போன்கள் சைபர் பிரிவு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணம் பிடிபடும்போது பணியில் இருந்த காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிசார் அஹ்மதுவுக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பணம் கொடுக்கச் சொல்லிய நபரின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது’’ என்றனர்.
டிஜிபி பாராட்டு
ரூ.14.71 கோடியை பறிமுதல் செய்த உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கர், காவலர் பிரேம்குமார், உதவி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று சென்னைக்கு வரவழைத்து பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT