Published : 02 Oct 2022 04:50 AM
Last Updated : 02 Oct 2022 04:50 AM

காரைக்குடியில் மாணவிகள் முன்பாக பைக் சாகசம் செய்த மாணவர் தவறி விழுந்து காயம்

காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் சாகசம் செய்து கீழே விழுந்த இளைஞர்.

காரைக்குடி

காரைக்குடியில் மாணவிகள் முன்பாக பைக் சாகசம் செய்த மாணவர் தவறி விழுந்து காயமடைந்தார். இதை வீடியோ எடுத்தவர் உட்பட மூன்று பேரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

காரைக்குடி கல்லூரி சாலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவிகளைக் கவர்வதற்காகவும், தன்னைக் கதாநாயகர் போல் காட்டிக் கொள்வதற்காகவும் இளைஞர்கள், மாணவர்கள் உயர் ரக ரேஸ் பைக்கில் தொடர்ந்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கல்லூரி சாலையில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் மாணவிகள் சிலர் நின்றிருந்தனர். அவர்களை கவருவதற்காக 2 மாணவர்கள் ரேஸ் பைக்கில் சாகசங்களில் ஈடுபட்டனர்.

அப்போது பின்புறம் இருந்த மாணவர், பைக்கில் ஏறி கையை விரித்தார். அவர் எதிர்பாராது மாணவிகள் முன்பே கீழே விழுந்து காயமடைந்தார். மேலும் அவர்கள் சாகசம் செய்ததை, பின்புறம் பைக்கில் வந்த மாணவர்கள் வீடியோ எடுத்தனர். அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து சாகசம் செய்தவர்கள், வீடியோ எடுத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காய மடைந்தவரைத் தவிர மற்ற மூன்று பேரையும் போலீஸார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x