திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட 12,890 பேர் கைது

திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட 12,890 பேர் கைது
Updated on
1 min read

திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 12,890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தெரிவித்துள்ளது: திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாநகரில் உள்ள பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, நிகழாண்டில் இதுவரை 12,890 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, தொடர் வழிப்பறி மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே, 2020-ல் 40 பேரும், 2021-ல் 85 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்றதாக 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் குற்றவாளிகளின் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக 1,027 பேரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, அவற்றை மீறியதாக 23 ரவுடிகள் உட்பட 42 பேர் மீது மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறைத் தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக 651 பேர், லாட்டரிச் சீட்டு விற்றதாக 90 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 113 பேர், மதுபானங்கள் விற்றதாக 1,124 பேர், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 9,857 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் கடந்தாண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in