Published : 02 Oct 2022 05:00 AM
Last Updated : 02 Oct 2022 05:00 AM

வந்தவாசி அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே வாரிசு சான்றிதழுக்கு தடையில்லா சான்று வழங்க 1,250 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வயலூர் அருகே உள்ள பூங்குணம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி இளங்கோவன். இவரது மனைவி விஜயா.

இவர், உடல்நிலை பாதிக்கப் பட்டு கடந்த 27-04-2010-ல் உயிரிழந்துள்ளார். இவரது பெயரில், மழையூர் இந்தியன் வங்கியில் ரூ.27 ஆயிரம் நகைக் கடன் பெற்றுள்ளதால், இந்த கடன் தொகையை பைசல் செய்து நகையை மீட்க வாரிசு சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது.

இதனால், விஜயாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை இணைத்து வாரிசு சான்றிதழுக்கு பூங்குணம் கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியனிடம், இளங்கோவன் கடந்த 04-06-2010-ல் மனு அளித்துள்ளார்.

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என கையொப்பமிட அவர், ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் இல்லை என இளங்கோவன் கூறவே, 1,250 ரூபாய் கொடுத்தால்தான், கையொப்பமிடுவேன் என கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் இளங்கோவன் கடந்த 02-08-2010-ல் புகார் கொடுத்துள்ளார். பின்னர், அவர்களது அறிவுரையின்பேரில், பூங்குணம் கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியனிடம் ரூ.1,250 லஞ்சப் பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றதும், நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரூ.4 ஆயிரம் அபராதம்: இதில், மனைவியை இழந்து துயர நிலையில் இருந்த கணவர் இளங்கோவனிடம் வாரிசு சான்றிதழுக்கு தடையில்லா சான்று வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணியனுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x