

வேலூர்: சென்னையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற ரூ.14.71 கோடி ஹவாலா பணத்தை பள்ளிகொண்டா போலீஸார் பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவிந்தம்பாடி நெடுஞ்சாலையொட்டி கேரள மாநிலபதிவெண் கொண்ட லாரியில்,காரில் வந்தவர்கள் கொடுத்தபெரிய பைகளை மாற்றிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்து, சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பார்சலை சோதனையிட்டதில் கட்டு கட்டாகப் பணம் இருந்தது. இதையடுத்து பணப்பைகளுடன் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்துவிசாரித்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த நிசார் அஹமத், அவரது உறவினரான மதுரையைச் சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடுவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் சர்புதீன், நாசர் என்பது தெரியவந்தது. சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்புப் பணத்தை எடுத்துச் செல்வதாகவும் பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறியதாகவும் யாரிடம் இருந்து யாருக்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
அவர்களிடம் வேலூர் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் விசாரித்ததில், ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் நிசார் அஹ்மதுவின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகளும், மத்திய புலனாய்வு குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பிடிப்பட்ட பணம்குறித்து விசாரிக்கப்படும் என மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி கள் தெரிவித்தனர்.
48 பண்டல்கள்: பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட 48 பண்டல்களில் இருந்த பணத்தை எண்ணும் பணி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நீடித்தது. இதில், ரூ.14 கோடியே 70 லட்சத்து 85,400 இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா போலீஸார் 4 பேரையும் கைது செய்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.