

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி, கடத்த முயற்சி செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 37 வயது பெண். கணவரை பிரிந்து 8 ஆண்டுகளாக தனியாக வாழும் இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான அஜித்குமார் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் காவேரிப் பட்டணத்தில் வசித்து வரும் வங்கி பெண் ஊழியரை அஜித்குமார் அடிக்கடி சந்திக்க வருவது வழக்கம். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் மது குடித்துவிட்டு வந்து தகராறிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே வங்கியில் பணிபுரியும் அப்பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து அஜித்குமாருக்கும், ஆறுமுகத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணத்துக்கு வந்த அஜித்குமார், அப்பெண் பணிபுரியும் வங்கிக்கு சென்றார். பின்னர், அங்கிருந்து வெளியே வந்தவரை தாக்கிய, ஆறுமுகம் அவர்களது நண்பர்களான திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் (31), நாட்றம்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பார்த்திபன் (32), மத்தூர் என்.மோட்டூரைச் சேர்ந்த சக்திவேல் (40), கண்ணன்டஅள்ளியைச் சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தி (63) ஆகியோருடன் காரில் வந்து கடத்த முயற்சி செய்தனர். இதனைக் கண்ட அங்கிருந்த வர்கள், காவேரிப்பட்டணம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இந்நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், அஜித்குமாரை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆறுமுகம் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.