

கரூர்: குளித்தலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சிவாயம் கீழக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் திருமுருகன்(37), கூலித் தொழிலாளி. திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 1 படித்து வந்த 15 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அந்தச் சிறுமி கர்ப்பமானதை அறிந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில், போக்ஸோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருமுருகனை கைது செய்து, விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, அந்தச் சிறுமிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிதைவான கருவை சேகரித்து, மரபணு பரிசோதனை செய்ததில், சிறுமி கருவுற்றதற்கு திருமுருகன்தான் காரணம் என்பது நிரூபணமானது. இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட திருமுருகனுக்கு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ.1,000 அபராதம் விதித்து, சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.