Published : 01 Oct 2022 06:00 AM
Last Updated : 01 Oct 2022 06:00 AM

வாணியம்பாடி ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய தண்ணீரில் சமையல் கலைஞர் உடல் மீட்பு

வாணியம்பாடியில் காவல் துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி நியூ டவுன், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் பயாஸ் அகமத்(45). இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பிரியாணி செய்வதற்காக அம்பலூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். பிறகு, இரவு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி சிகரனபள்ளி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் உடல் ஒன்று மிதப்பதாக அம்பலூர் காவல் துறையினருக்கு நேற்று காலை பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அதன்பேரில், காவல்துறை யினர் மற்றும் தீயணைப்புத் துறை யினர் சுரங்கப்பாதை பகுதிக்கு சென்று ஆண் உடலை மீட்டனர், விசாரணையில் அவர், காணாமல் போன பயாஸ் அகமத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பயாஸ் அகமத் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காவல் துறையினர் முயன்றனர். அப்போது, அங்கு குவிந்த பொதுமக்கள் உடலை எடுக்கவிடாமல் காவல் துறையினரை முற்றுகையிட்டனர்.

பயாஸ் அகமத். (கோப்புப்படம்)

பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளாக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் இப்பணிகள் முடிவடைய வில்லை. சுரங்கப்பாதையில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து குட்டைப்போல் தேங்கியுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் என பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேங்கிய தண்ணீர் வழியாக சென்ற பயாஸ் அகமத் நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே, உடனடியாக தண்ணீரை அகற்ற வேண்டும். அதுவரை, உடலை எடுத்து செல்ல விட மாட்டோம்" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல் துறை யினர், "விரைவில் தேங்கிய மழைநீரை அகற்ற உரிய நட வடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தனர் இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு, பயாஸ்அகமது உடல் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x