

பூந்தமல்லி: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(34). இவர், சென்னை, போரூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், பாண்டியன், கடந்த 2015-ம் ஆண்டு அக். 25-ம் தேதி போரூர், ஆற்காடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றார். அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, தொழிலாளியான உதயகுமார் என்கிற கத்தி உதயகுமார்(33)-க்கும் பாண்டியனுக்கும் இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, உதயகுமார், தன் நண்பரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிபாஸுடன் சேர்ந்து, அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால், பாண்டியனை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் வாதிட்டார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், ஜோதிபாஸ் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில் முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், உதயகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, பூந்தமல்லி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முருகேசன் நேற்று உதயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.