சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
திருவள்ளூர்: சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அருகே கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(36). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில், தன் வீட்டருகே வசித்து வந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில் ஜெய்கணேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஜெய்கணேஷுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
