திருவள்ளூர் | 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 69 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை: மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

பலராம் சிங்
பலராம் சிங்
Updated on
1 min read

திருவள்ளூர்: ஆவடியில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவருக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், ஆவடி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் பலராம் சிங்(69). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பலராம் சிங், 8 வயது சிறுமியை மட்டுமல்லாமல், அப்பகுதியை சேர்ந்த மேலும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான போக்சோ வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் பலராம் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார். அதில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக பலராம் சிங்குக்கு 16 ஆண்டுகள் கடுங்கால் சிறைத் தண்டனையும், ரூ.4,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலராம் சிங், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in