

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் வாகனத்தை திருடிக் கொண்டு திருடர்கள் இருவர் தப்பும் போது அதனை சாமர்த்தியமாகச் செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் காவலாளி ஒருவர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
டெல்லியின் கல்காஜி விரிவு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் எப்படி சிக்கினர்?
தெற்கு டெல்லி பகுதியில் இது நடந்துள்ளது. அங்கு அமைந்துள்ள எவரெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு நேற்று இருவர் வந்துள்ளனர். அங்கிருந்தவர்களிடம் தாங்கள் இருவரும் நகராட்சி அதிகாரிகள் எனத் தெரிவித்துள்ளனர். அதோடு கட்டிடங்களை ஆய்வு செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 மணி அளவில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு கொரியர் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் தபாலுடன் வந்துள்ளார். வந்த வேகத்தில் தனது வண்டியின் சாவியை அவர் எடுக்கத் தவறியுள்ளார். அதோடு கொரியர் டெலிவரி செய்ய வேண்டிய வீட்டின் காலிங் பெல்லை அவர் அடித்துள்ளார். அப்போது அங்கிருந்த திருடர்கள் இருவரும் இது தான் சமயம் என எண்ணி கொரியர் டெலிவரி நபரின் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பியுள்ளனர்.
அதை கவனித்த அந்த பைக்கின் உரிமையாளர் ‘திருடர்கள்… திருடர்கள்’ என கூச்சலிட்டு உள்ளார். அதை அந்த குடியிருப்பில் பிரதான வாயிலில் பாதுகாப்புப் பணியை கவனித்துக் கொண்டிருந்த காவலாளி கவனித்துள்ளார்.
சற்றும் தாமதிக்காமல் வேக வேகமாக கதவை அவர் அடைத்துள்ளார். அதற்குள் தப்பிவிடலாம் என பைக்கை தூக்கிய திருடர்கள் முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சரியான நேரத்தில் கதவுகள் மூடப்பட்ட காரணத்தால் அதில் மோதி, நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அதில் ஒருவரை அங்கு இருந்த மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். மற்றொருவர் பக்கத்து காலனியில் பிடிபட்டுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் அங்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அது தான் இப்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.